thevarji

thevarji

Friday, August 13, 2010

அண்ணனின் கடிதம் 01

பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே!
உங்கள் அனைவருக்கும் அண்ணனின் அன்பான வணக்கங்கள்.
தமிழர் வரலாற்றிலே, தேவரினம் என்பது நீதியையும், நேர்மையையும் காத்திட வேண்டி தன்னையே அழித்துக்கொண்ட தியாக சீலர்கள் பலரைத்தந்த இனமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று நம் சக தமிழ் சகோதரர்களை இனவெறி கொண்டு தாக்கி அழிக்கும் மிகக் கொடுமையான நிலைக்கு இந்த தேவரினம் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஏன் இந்த சகோதர யுத்தம்?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற  முதுகுளத்தூர் கலவரம், அதைத்தொடர்ந்து சில ஆண்டுகளில் முக்குலத்தின் முகவரி முத்துராமலிங்கத்தேவர் மறைவு இவைகளெல்லாம் பெரும்பான்மையான  முக்குலத்தோர்களை  அறிஞர் அண்ணாவின் தலைமையில் உதயமான  திராவிட  முன்னேற்ற கழகத்தில் கொண்டு போய் சேர்த்தது.  அண்ணாவின் மறைவிற்குப்  பிறகு முதலமைச்சரான கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக  விளங்கிய  புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் உருவான  அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பெருவாரியான முக்குலத்தோர்கள் இணைந்தனர். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்கள்  மறையும் வரை  தமிழகத்தில்  சொல்லும்படியாக எந்தவொரு இனகலவரங்களும் நடைபெறவில்லை. 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, இன்றுவரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. இவைகளில் பெரும்பாலான கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது காரணமானவர்கள் முக்குலத்தைச் சேர்ந்தவர்களே என்பது மறுக்கமுடியாத உண்மை.  கலவரங்களின் காரணம் மிக எளிதில் சொல்லிவிடலாம். "தேவர் சிலைமீது அசுத்தம் செய்து விட்டார்கள்"  அல்லது "தேவர் படம் போட்ட சுவரொட்டியை யாரோ கிழித்து விட்டார்கள்"  மிக முக்கியமான காரணங்களில் இவையிரண்டும் உண்டு.

தம்பி தங்கைகளே, சற்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ ஒரு சமூக விரோதி செய்த இழிசெயலுக்கு, ஒட்டுமொத்த தேவரினமும் ஒன்று கூடி,நம் சக தமிழர்களின்  உயிர்களையும், உடமைகளையும்  நாசமாக்குவது என்பது... தேசத்திற்காக  தன் இன்னுயிரையும்  துச்சமென மதித்து நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ்  அவர்களின் தலைமையில் இணைந்து  இந்திய தேசிய ராணுவம்  அமைத்துப்  போரிட்டவர்களின் வழிவந்த நமக்கு தகுமா?  

ஒன்றுபட்ட தமிழ் சமுதாயத்தில் உங்களைவைத்துப் பிளவு உண்டாக்கி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் அரசியல்வாதிகளின் சதித் திட்டத்தில் இனக்கலவரமும் உண்டு என்பதை உணர்ந்து அவர்களின் எண்ணம் ஈடேற இடம் தராமல் சக தமிழ் சகோதரர்களோடு ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்தோடும் வாழவேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடலாகாது.

இன்றைய சூழ்நிலையில், இனக்கலவரங்கள் போன்ற தேவையற்ற இழிவான   செயல்களிலெல்லாம்  ஈடுபடுவதை  விட்டுவிட்டு, நம்முடைய தீவிரத்தை கல்வி கற்பதிலும், நல்ல வேலைக்குச் செல்வதிலும்,  வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்வதிலும் காட்டுவதே நம் சந்ததியினர்க்கும், இந்த தமிழ் சமுதாயத்திற்கும் நாம் ஆற்றவேண்டிய கடமை என்பதை கருத்தில் கொண்டு இன்றே நல்லதோர் சபதமேற்போம்.

அன்புடன்
அண்ணன்

1 comment:

 1. அருமை அண்ணனுக்கு வணக்கம்,

  உங்களது மின்மடல் முகவரியை எனக்கு அறிய தர முடியுமா? உங்களது இந்த தளமும், தளத்தின் மூலம் நீங்கள் எடுத்து செல்லும் விதமும் என்னை ஆச்சிரிய பட வைக்கிறது.உங்களோடு தொடர்புகொள்ள ஆசாரி, ஆனாலும் நீங்கள் விருப்ப படாமல் உங்களை தொடர்பு கொள்ள முடியாதவாறு, நீங்கள் இருக்கின்றீர்கள்.உங்களின் விருப்பம் இருப்பின் என்னை உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கவும்.

  என் மின்மடல்: emalathithan@gmail.com
  வலைத்தளம்:
  தேவர் முக்குலத்தோர் தளம்: http://www.thevar-mukkulathor.blogspot.com/
  தமிழ்வாசல்:http://www.tamilvaasal.blogspot.com/  நன்றி

  ReplyDelete